Monday, April 25, 2011

Penguins... on the way to extinction....

பென்குயின் பறவைகள் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். மிகவும் கடுமையான குளிர் பிரதேசமான அண்டார்டிகாவில் வசிக்கும் இந்த பறவைகள் மிகவும் சாதுவானவை. ரத்தத்தை உறைய வைக்கும் கடும் பனிப்பாறைகள் நிறைந்த, துருவ பகுதியில் மட்டுமே இவைகள் வளரும். பெரும் பனிப்பாறைகள் மிதக்கும் கடலில், இவைகள் குதித்து விளையாடும், தண்ணீரில் மூழ்கி மீன்களை பிடித்து சாப்பிடும். இந்த அபூர்வ காட்சியை பார்ப்பதற்கு என்றே, சுற்றுலாப் பயணிகள் துருவ பகுதியில் குவிவர்.
உலகம் முழுவதும் இப்போது வெப்பம் அதிகரித்து வருகிறது. இதன் பாதிப்பு அண்டார்டிகாவையும் விட்டு வைக்கவில்லை. அண்டார்டிகாவில் இப்போது இளம் பென்குயின்களின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது என, ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அர்ஜென்டினா நாட்டிற்கு சொந்தமான தீவு மார்டிலோ தீவு. அமெரிக்காவில் தெற்கு கடைகோடியில் அண்டார்டிகாவை ஒட்டி இந்த தீவு உள்ளது. இந்த தீவில் கூட்டம், கூட்டமாக பென்குயின் பறவைகள் வசிக்கின்றன. பென்குயின் பறவைகள் குறித்த ஆராய்ச்சியில், அமெரிக்காவின் தேசிய அறிவியல் அகடமி ஈடுபட்டுள்ளது. இங்குள்ள பென்குயின்களைப் பிடித்து, அதன் உடலில் ஒரு அடையாள சின்னத்தை பொறித்து அனுப்புகின்றனர்.
கடந்த, 1970களில், இவ்வாறு அடையாள மிடப்பட்ட பென்குயின் பறவைகளில், 50 சதவீத பறவைகள், இரண்டு முதல் நான்கு ஆண்டு களுக்குள் மீண்டும் குட்டி போட கரைக்கு வரும். இப்போது, அதன் எண்ணிக்கை வேகமாக குறைந்து விட்டது.
சமீபத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின்படி, இதில் வெறும், 10 சதவீத பென்குயின் பறவைகள் மட்டுமே மீண்டும் இனப்பெருக்கத்திற்காக கரைக்கு வந்தது தெரிய வந்துள்ளது. இதற்கு காரணம், உலக வெப்பமயமாதல்தான். அண்டார்டிகா பகுதியில் வெப்பம் அதிகரிப் பதால், அங்கு கடல் பகுதியில் வசிக்கும் மீன்கள், வேறு குளிர் பிரதேசங்களை நோக்கி இடம் பெயர்ந்து விட்டன அல்லது அவற்றின் எண்ணிக்கை குறைந்து விட்டது. இதனால், பென்குயின்களுக்கு போதுமான உணவு கிடைக்கவில்லை. இதனால்தான், பென்குயின் கள், இனப்பெருக்கத்திற்காக இங்கு வருவது குறைந்து விட்டது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன்பு, இந்த பகுதியில், 80 லட்சம் பென்குயின் ஜோடிகள் இருந்தன. இப்போது, அவைகள், 20 முதல் 30 லட்சமாக குறைந்து விட்டது. "இது ஒரு ஆபத்தான முன் எச்சரிக்கை. உலகம் முழுவதும் வெப்பம் அதிகரித்து வருவதை, மனிதர்களுக்கு, பென்குயின்கள் உணர்த்துகின்றன. இதை, நாம் ஒரு பாடமாக எடுத்து, முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்காவிட்டால், பின்னர், மனித இனத்திற்கே ஆபத்து...' என, பென்குயின் ஆராய்ச்சியாளர் வைனிடிரிவல்பீஸ் என்பவர் எச்சரித்துள்ளார்.